"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Curry Leaf Tree – Part 3

16 / 100

உணவிற்கு வாசனை ஊட்டும் பொருட்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் கருவேப்பிலையைப் பற்றித்தான் நாம் தொடர்ந்து பார்த்துவருகின்றோம்.

கருவேப்பிலையைப் பற்றிய தொடர் பதிவில் இது மூன்றாவது பகுதி (PART 3).

முதல் பகுதியில் [PART 1] கருவேப்பிலையைப் பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் தாவரத்தின் தன்மை, இலைகளின் இயல்புகளோடு பூக்களின் தன்மைகளைப்பற்றியும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியான இரண்டாவது பகுதியில் [PART – 2] காய்களின் தன்மை, விதை மற்றும் வேர்களின் தன்மைகளோடு அதன் மருத்துவத் குணங்களையும் பார்த்தோம்…

மூன்றாவது பகுதியான இப்பதிவில் கருவேப்பிலையை சாகுபடி செய்யும் முறையைப்பற்றியும், பயிர் பாதுகாப்புபற்றியும் பார்க்கலாம் வாருங்கள்…

இப்பதிவில் கருவேப்பிலை மரத்தை நம்முடைய வீட்டு தோட்டங்களில் அல்லது விவசாய தோட்டங்களில் பயிர் செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.

இதில் மூன்றுவிதமான ரகங்கள் உள்ளன. அவை..

Regular (RE) – ரெகுலர் ரகம்.

Gamthi Miniature (GM) – சிறிய ரகம்.

Dwarf (DF) – குட்டை ரகம்.

இதில் “ரெகுலர்” ரகமானது உயரமாக வளர்ந்து அழகாக காட்சிதரக்கூடியது. வேகமாக கிளைகளை உருவாக்கி அதிக அளவில் மகசூலையும் தரக்கூடியது. அடர்பச்சை இலைகளுடன் காணப்படும் இது இந்தியா முழுவதுமே பயிராகிறது.

இரண்டாவது ரகமான “கமதி” என்று அழைக்கப்படும் சிறிய ரகமானது அடர்த்தியான இலைகளை கொண்டுள்ளது. இலைகள் அளவில் சிறியதாக ஆனால் தடிமனாக இருக்கும். அதிக அளவில் வாசனையை தரக்கூடியது. ஆனால் மிக மெதுவாக வளரக்கூடியது. இது சேர்க்கப்படும் உணவுப்பொருள் அதிக அளவு வாசனையையும், சுவையையும் பெறுகிறது.

மூன்றாவது ரகமான “குட்டை” ரகமானது உயரமாக வளர்வதில்லை. மாறாக பல பக்க கிளைகளுடன் பரந்து புதர்போல் வளர்கிறது. இலைகள் “ரெகுலர்” ரகத்தின் இலைகளைவிட சற்று நீளமானது. வெளிர் பச்சை நிறத்தை கொண்டவை. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதுபோல இதில் வாசனைக்கும் குறைவில்லை.

Murraya Koenigii

மேற்குறிப்பிட்ட மூன்று ரகங்களுமே சுவைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்று சிறிது வேறுபடுகின்றன.

இந்த கறிவேப்பிலையை பல ஏக்கர் பரப்பளவில் உற்பத்திசெய்யும் விவசாய நிலங்களை இருநாடுகளே கொண்டுள்ளன. ஒன்று இந்தியா. மற்றொன்று ஆஸ்திரேலியா.

இந்தியாவில் இது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது.

இது பொதுவாக வெப்பமண்டல தாவரமாக இருந்தபோதிலும் குளிர் பொருந்திய மிதவெப்ப மண்டலங்களிலும் அங்குள்ள பருவ நிலைகளையும் சமாளித்து கொண்டு ஓரளவு வளரத்தான் செய்கின்றன. ஆனால் அதிக குளிர் நிலவும் இடங்களில் இவைகள் வளருவதில்லை.

இது செழிப்பாக வளர நல்ல சூரிய வெளிச்சமும் சுற்றுப்புற வெப்பநிலை 18 ⁰C (65 ⁰F) அளவிலும் இருக்கவேண்டியது அவசியம்.

இதனை இருவகைகளில் பயிரிடலாம். அவை..

தண்டுகளை பதியமிடுதல் மூலமாக.

விதைகள் மூலமாக.

தண்டுகளை பதியமிடுதல் முறையில் ஒருவிரல் கனமுள்ள தண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரை அடி நீளத்தில் கணுவுள்ள குச்சிகளாக நறுக்கி குச்சிகளின் அடிப்பகுதி சாய்வாக இருக்கும்படி கத்தியால் சீவிக்கொள்ள வேண்டும்.

அதன்பின் சாய்வாக வெட்டப்பட்ட அடிப்பகுதியை வேர் வளர்ச்சியை தூண்டும் “Rooting Hormone” என்னும் மருந்தில் நனைத்து குச்சியின் அடிப்பகுதியை வரிசையாக கரிம உரம் கலந்த மணல்களில் நட்டுவைக்க இரண்டு வாரங்களில் துளிர்விடும். மூன்று வாரங்களில் வேர்விடும்.

planting the curry leaf cutting.

குச்சிகளை நட்டுவைக்கும் பகுதி வெயில் இல்லாத நிழலான பகுதியாக இருக்க வேண்டியது அவசியம்.

பழங்களிலிருந்து விதைகளை தனியாக பிரித்தெடுத்துதான் விதைக்க வேண்டுமென்பதில்லை. முழுப்பழமாகவே விதைத்துவிடலாம். ஒரு பழத்தினுள் ஒன்று அல்லது இரு விதைகள் மட்டுமே இருக்குமென்பதால் ஒரு பழத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு செடிகள் மட்டுமே முளைக்கின்றன.

ஆனால் பழங்களுடன் விதைக்கப்படும் விதைகளைவிட பழங்களிலிருந்து தனியாக பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் விரைவாக முளைக்கின்றன.

Karuveppilai seeds

கனிந்த பழங்களை குளிர்ந்த நீரில் போட்டு கைகளால் பிசைந்து அலசுவதின் மூலம் விதைகளை எளிதில் பிரித்தெடுக்கலாம்.

பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் விதைத்துவிட வேண்டும். பிறவிதைகளைப்போல வெயிலில் காய வைப்பதெல்லாம் வேலைக்காகாது.

ஏனெனில் பிற விதைகளுக்கு இருப்பதுபோல உள்ளிருக்கும் வித்திலைகளில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாக்கும் பொருட்டு மேல்புறத்தில் கடினமான ஓடுகளை இது பெற்றிருக்கவில்லை. எனவே வெயிலில் காயவைத்தாலோ அல்லது விதைப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக்கொண்டாலோ வித்திலைகளிலுள்ள நீர் சத்துகளெல்லாம் வறண்டுபோய் விதைகள் இறந்துவிடும்.

கருவேப்பிலை விதை முளைப்பதற்கு சுற்றுபுற வெப்பநிலை 20 ⁰C இருக்க வேண்டும்.

விதைகள் பயிரிடும் மண்ணின் அமில கார அளவு 5.6 – 6.0 என்ற விகிதாசாரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

நன்கு பழுத்த பழங்கள் அல்லது விதைகளை சேகரித்து சமதளமான நிலத்தில் விரல்களால் கால் அங்குலத்துக்கு குறைவான அளவில் பள்ளம் செய்து அதில் ஒரு விதையை போட்டு மணல்கொண்டு மூடவும். இவ்வாறு வரிசையாக விதைத்து நீர் தெளித்துவர 20 நாட்கள் கழித்து முளைவிட ஆரம்பிக்கும்.

விதைகளின் முளைப்பு விகிதம் குறைவாக உள்ளதால் உங்களுக்கு தேவைப்படும் செடிகன்றுகளைவிட அதிக அளவில் விதைகளை விதைக்கவும்.

பின் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வளர்ந்த நாற்றினை பிடுங்கி தனித்தனியான பாலித்தீன் கவர்களில் வைத்து பராமரிக்கவேண்டும்.

Curry Leaf small plants.

1 அல்லது ஒன்றரை வருடங்களில் போதிய அளவு வளர்ந்துவிடும் இதுவே விவசாய நிலங்களில் நடவு செய்வதற்கு ஏற்றது.

நடவு செய்வதற்கு முன்னால் நிலத்தை பண்படுத்த வேண்டும். நிலத்தை எவ்வாறு பண்படுத்துவது என்று பார்ப்போம்.

கருவேப்பிலையை நடவு செய்வதற்கு முன் நிலத்தை 3 அல்லது நான்கு தடவை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும்.

பின் செடியை நடவு செய்வதற்கு ஏதுவாக 30 செ.மீ ஆழ குழிதோண்ட வேண்டும். இரு குழிகளுக்கு  இடைபட்ட தூரம் 6 அடி இருத்தல் வேண்டும். 15 கிலோ மக்கிய தொழு உரத்தை மண்ணுடன் கலந்து குழிகளில் நிரப்ப வேண்டும். அப்படியே ஒன்றிரண்டு மாதங்கள் உரம் நன்கு மக்கும்படி ஆறப்போடவும்.

ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பின் ஒன்று அல்லது ஒன்றரை வயது ஆன இளம் செடிகளை அதில் நடவு செய்தல் வேண்டும். நடவு செய்தபின் நீர் பாய்ச்சுதல் வேண்டும்.

அதன்பின் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு தடவை நீர் பாய்ச்சுதல் வேண்டும். மரம் ஓரளவு நன்றாக வளர்ந்து மகசூல் தர தொடங்கிய உடன் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்தாலே போதுமானது.

வருடத்திற்கு ஒரு தடவை எரு உரம் இட்டால் போதுமானது. அவ்வப்போது களைகளை அகற்றுவதுடன் நிலம் நன்கு காற்றோட்டமாக இருக்கும் விதத்தில் வருடத்திற்கு மூன்று அல்லது 4 தடவை உழுது வைக்க வேண்டியது அவசியம்.

இதன் ஊடுபயிராக பூண்டு, புதினா, வெங்காயம், தக்காளி முதலியவைகளை பயிர்செய்யலாம். ஆனால் பூச்செடிகள், கடுகு, மா, எலுமிச்சை, நாரத்தை போன்ற சிட்ரஸ் மரவகைகளை நடவு செய்வதை தவிர்க்கவேண்டும்.

இது வறட்சியை தாங்கி வளரும் தாவரம். அதிக அளவில் நீர்ப்பாசனம் தேவைப்படுவதில்லை. மாதத்திற்கு இருமுறை நீர்பாய்ச்சினாலே போதுமானது.

இதன் வேர் பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வேரில் நீர் தங்கினால் பூஞ்சாண தொற்று மற்றும் வேரழுகல் நோய் ஏற்பட்டு இலைகள் பழுத்து உதிரும். தாவரமும் விரைவில் மரணிக்கும். எனவே சிறந்த வடிகால் வசதியை ஏற்படுத்துவது அவசியம்.

தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரங்களை கொடுக்கலாம். இலைகள் மஞ்சள் நிறமாகவும் அதிலுள்ள நரம்புகள் அடர் பச்சை நிறமாகவும் தோற்றம்தந்து இலைகள் உதிர ஆரம்பித்தால் மண்ணில் “இரும்புசத்து” குறைவாக உள்ளது என்பதனை எளிதாக கண்டறிந்துவிடலாம். எனவே  இக்குறைபாட்டை களைய சிறிதளவு இரும்பு சல்பேட் ஐ மணலுடன் கலந்து தூவ வேண்டும்.

வருடந்தோறும் ஒரு மரத்திற்கு சுமார் 15 லிருந்து 20 கிலோ வரையில் தொழுஉரம் இடவேண்டியது அவசியம். மேலும் ரசாயன உரமாக 150 கிராம் யூரியா, 50 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் இடவேண்டும்.

குறைந்த அளவு பராமரிப்பே போதுமானது என்றாலும் களைகள் அவ்வப்போது அகற்றப்பட வேண்டியது அவசியம்.

இது 16 ⁰C லிருந்து 37 ⁰C வரையுள்ள வெப்பநிலையிலேயே செழிப்பாக வளர்கின்றன. எனவே சுற்றுப்புற வெப்பநிலையையும் கவனித்துவர வேண்டியது அவசியம்.

இனி இதனை தாக்கும் பூச்சி இனங்களைப் பற்றியும் அதனை கட்டுப்படுத்தும் முறையைப் பற்றியும் பார்க்கலாம்.

இந்த கருவேப்பிலையானது அதிகம் பாதிக்கப்படுவது “அசுவிணி” (Aphids) மற்றும் இலைப்புள்ளி நோய்களால்தான்.

இலைப்புள்ளி நோயானது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகாளால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணை மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

அசுவிணி பூச்சி (Aphids) மற்றும் செதில் பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.

Cetil Pucci

இதனை கட்டுப்படுத்த “டை மெத்தோயேட்” 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி என்பது பாக்டீரியாவால் இலைகளில் ஏற்படும் ஒருவித பாதிப்பு. இந்த பாதிப்பால் இலைகளின் மேற்பகுதிகளில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் நெருக்கமாக தோன்றும். இதனால் இலைகளின் பசுமைத்தன்மை பாதிக்கப்பட்டு இலைகள் விரைவில் உதிர்ந்துபோகும்.

இந்த நோயானது “Candidatus Liberibacter asiaticus” (கேண்டிடாடஸ் லிபெரிபாக்டர் ஆசியடிகஸ்) என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த “கார்பன்டாசிம்” 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பொதுவாக கருவேப்பிலை இலைகள் உணவாக பயன்படுத்தப்படுவதால் இலைகள் அறுவடை ஆரம்பிப்பதற்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே பூச்சிமருந்து தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

ஆபத்தான பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதைவிட வேப்ப எண்ணெய் பயன்படுத்தி பூச்சிகளை ஒழிப்பது நன்மை பயக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் கலவையை தெளித்துவரலாம். இது பாதுகாப்பானது.

நடவு செய்த இரண்டாவது ஆண்டிலிருந்து அறுவடையை தொடங்கலாம்.

இலைகள் அதிகமாக தழைக்க வேண்டுமெனில் காய்கள் காய்ப்பதை தள்ளிப்போடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மஞ்சரிகளில் மொட்டுக்கள் உருவாகும்போது அவைகளை அகற்றிவிடலாம். இதனால் இலைகள் அதிக அளவில் தழைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

அறுவடை செய்யும்போது தாவரத்தில் எவ்வளவு இலைகள் உள்ளதோ அவற்றில் 30 % மட்டுமே அறுவடை செய்யவேண்டும். அதிகமாக அறுவடை செய்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து வரும் வருடங்களில் மகசூலும் குறைந்துபோகும்.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச மகசூலாக சுமார் 5 டன் இலைகளை பெறமுடியும். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவை இலைகளை அறுவடை செய்யலாம் என்பதால் வருடத்திற்கு 15 முதல் 20 டன் இலைகளை மகசூலாக பெற முடியும்.

தொடர்ந்து 20 வருடங்கள் மகசூல் தரும் பணப்பயிர் இதுவென்று சொல்லலாம். 20 வருடங்களுக்கு மேற்பட்ட மரங்கள் போதிய அளவில் பலன்தருவதில்லை. ஆதலால் அதற்குப்பதிலாக புதிய நாற்றுகளை நட்டு பராமரித்துவர வேண்டும்.

இந்த கருவேப்பிலையில் பல நன்மைகள் உள்ளது என்றாலும் சில தீமைகளும் உள்ளன. ஆனால் இந்த தீமைகள் எளிதாக நிவர்த்தி செய்யக்கூடியதே.

வாருங்கள்… இதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையும், அதனை நிவர்த்தி செய்யும் முறைகளையும் பார்ப்போம்.

கருவேப்பிலைகளை அரைத்து துவையலாகவோ அல்லது பொடியாகவோ சாதத்தில் விட்டு பிசைத்து கிருஷ்ணா என்று மூக்குமுட்ட அடிப்பதற்கு முன்னால் அதில் ஒரு கரண்டி “நெய்” சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

Curry Leaf Power

இது எதற்கு தெரியுமா?

இந்த கருவேப்பிலையானது நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை செய்தாலும்கூட அதிக அளவில் சாப்பிடும்போது ஒருசில தீமைகளையும் செய்கிறது அதில் ஒன்று “குடல் வறட்சி“. அதாவது உங்கள் குடல் ஈரப்பதத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் திறனை இழந்துவிடும்.

இதனால் வயிற்றில் சில அசௌவ்கரியங்கள் ஏற்படுவதோடு இயல்பாக மலம் கழிப்பதிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்.

இதிலிருந்து தப்பிக்க கருவேப்பிலையை துவையலாகவோ, பொரியலாகவோ, பொடிகளாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் கூடவே 1 டீஸ்பூன் நெய்யும் சேர்த்துக்கொண்டு நெய்மணம் கமழ கமழ சாப்பாட்டை ஒருபிடி பிடியுங்கள். குடல் வறட்சியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம். மலமும் எளிதாக கழியும். பிராபளம் சால்வ். மறுநாள் காலையில் உங்கள் முகம் சகல ஐஸ்வர்யங்களுடன் மலர்ச்சியாக இருக்கும்.

&&&&&&&&&&&&&&&&&&&&&

“கறிவேப்பிலை – Curry Leaf Tree” என்னும் இந்த பதிவின் மூலம் கருவேப்பிலையைப் பற்றிய தகவல்கள் பலவற்றை அறிந்துகொண்டோமல்லவா… இனி வரும் பதிவுகளில் மேலும் பல மரங்களைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இருக்கின்றோம்… தொடருங்கள்… நன்றி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!