Karuveppilai – Curry Leaf.
கறிவேப்பிலை – Curry Leaf Tree.
PART – 1.
“கறிவேப்பிலையோ கறிவேப்பிலை
காய்கறிக்கெல்லாம் தாய்பிள்ளை”.
தமிழ் மணத்துடன் தெம்மாங்கு வாசமும் கலந்து காற்றில் தவழ்ந்து நம் காதுகளில் நுழைந்தது அந்த நாட்டுப்புற பாடல்.
பாட்டில் கலந்துள்ள வாசனை அது குறிப்பிடும் கருவேப்பிலையிலும் நிறையவே நிறைந்துள்ளது என்பதனை தமிழக அரசின் பாவேந்தர் விருதுக்கு பாத்திரமான S.D. சுந்தரம் அவர்கள் கவிதைமூலம் எடுத்துரைப்பதை பாருங்கள்..
“எட்டடுக்கு மாளிகையில்
இட்டலி பல தின்றாலும்
கறிவேப்பிலை சட்டினிக்கு
இணையாகுமோ பராபரமே“.
இதை கேட்கும்போது மனிதர் ரசிச்சு ருசிச்சு அப்புறந்தான்யா பாடியிருக்கார் என்று சொல்ல தோன்றுகிறது அல்லவா!

ஆம்… உணவிற்கு சுவையூட்டிட எத்தனையோ வாசனை நிறைந்த மசாலா பொருட்கள் இருந்தாலும் அவைகள் எதுவுமே இதுக்கு இணையாகாது என்பதுபோல உணவிற்கு சுவையும் நறுமணமும் கொடுக்கவல்லது கருவேப்பிலை (Curry Leaf) மட்டுமே!
கறிவேப்பிலை மருதமான ஒருவித வாசனையை கொண்டிருப்பதால் உணவுப்பொருள்களுக்கு வாசனை கொடுப்பதில் இது முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.
இது உணவுக்கு சுவையும் மணமும் மட்டுமே கொடுக்கிறது. அதற்காக மட்டுமே இது சேர்க்கப்படுகிறது என பலபேர் நினைத்துக்கொன்டு சாம்பாரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கருவேப்பிலையை காப்பாற்றி பாதுகாப்பாக கரையேற்றிவிடுகின்றனர்.
உண்மையில் இது ஓரமாக வைக்கப்பட வேண்டிய பொருளா? என்றால்… இல்லை இல்லை… உடலுக்கு உரமாக்க வேண்டிய பொருள்.
நீங்கள் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணிக்க வேண்டுமெனில் அதற்கு கருவேப்பிலையின் உதவி மிகமிக அவசியம். இதிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் சாப்பிடும் உணவு விஷமிக்காமல் அதாவது “ஃபுட் பாய்சன்” (Food Poison) ஆகாமல் தடுக்கும் திறனும் இதற்கு உள்ளது.
முதன்முதலில் கறிவேப்பிலையை பயன்படுத்தியவர்கள் தமிழர்களே என்பது நமக்கெல்லாம் பெருமை. உலகிலேயே அதிக அளவில் கருவேப்பிலை பயன்படுத்தும் நாடுகள் இலங்கையும், இந்தியாவும் மட்டுமே. பிற நாடுகளில் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில்கூட தமிழ் மாநிலத்தில் மட்டுமே அதிக அளவில் கறிவேப்பிலை சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் அதிக அளவில் கறிவேப்பிலை சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட சில வகை உணவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து பிறநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் தற்போது வெளிநாடுகளிலும் கருவேப்பிலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மக்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
சரி,.. இனி கருவேப்பிலை என்னும் தாவரத்தின் தன்மைகளைப் பற்றியும், பயன்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம்.
கருவேப்பிலை – Karuveppilai.
திணை – தாவரம்.
பெருந்திணை – யூகார்யோட்டா (Eukaryota).
தாயகம் – இந்தியா, இலங்கை.
பிரிவு – Spermatophyta (வித்து தாவரம்).
துணை பிரிவு – Angiospermae (பூக்கும் தாவரம்).
வகுப்பு – Dicotyledonae (இருவித்திலை தாவரம்).
வரிசை – Sapindales (சபின்டேல்ஸ்).
குடும்பம் – Rutaceae (ருட்டாசியே). [சிட்ரஸ்].
துணைக்குடும்பம் – Aurantioideae (ஆராண்டியோடியே).
பேரினம் – Murraya (முர்ரயா).
இனம் – M. koenigii.
சுவை – துவர்ப்பு.
ஆயுள் – சுமார் 50 ஆண்டுகள்.
தாவரவியல் பெயர் – Murraya Koenigii. (முராய்யா கோய்னிகி) மற்றும் Bergera Koenigii (பெர்கெரா கோய்னிகி) என இரு பெயர்களை கொண்டுள்ளது.
தமிழ் பெயர் – “கறிவேப்பிலை” மற்றும் “கருவேப்பிலை”.
பெயர் காரணம் – இலைகள் ஓரளவு வேம்பின் இலைகளை ஒத்து காணப்படுவதாலும், கறிகளுக்கு வாசனைதருவதற்காக பயன்படுத்தப்படுவதாலும் “கறிவேப்பிலை” என்னும் பெயரை பெற்றது. இம்மரத்தின் பட்டைகள் சாம்பல் மற்றும் கருமையான நிறத்தை கொண்டுள்ளதால் “கருவேம்பு” என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இது கருவேப்பிலை என்று வேப்பிலையை நினைவுபடுத்தினாலும், வேப்பிலையைப்போல கசப்பு சுவை இல்லையென்பதால் “இனிப்பு வேப்பிலை” என பொருள்படும்படி பல மொழிகளில் அழைக்கப்பட்டு வருகிறது.
வேறுபெயர்கள் – கறிவேம்பு, கருவேம்பு, கஞ்சகம், கஞ்சக நனு முறி, கருவப்பிலை.
ஆங்கில பெயர் – Curry Leaf tree (கறி லீப்).
மேற்கத்திய நாடுகளில் “Helichrysum italicum” என்னும் தாவரவியல் பெயர்கொண்ட மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும் ஒரு சிறிய செடியினம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் “Curry plant” என்று கூறுகின்றனர். இதுவும் கறிவேப்பிலையின் நறுமணத்தை கொண்டுள்ளதால் “Curry plant” என்று அழைக்கின்றனர். ஆனால் சமையலுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல. பயன்படுத்துவதுமில்லை. எனவே “Curry Leaf” என்று சொல்லப்படும் கறிவேப்பிலையும் “Curry plant” என்று அழைக்கப்படும் மஞ்சள் பூ பூக்கும் தாவரமும் ஒன்றல்ல. முற்றிலும் வெவ்வேறானவை என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

ஹிந்தி பெயர் – கறிபத்தா.
சிங்கள பெயர் – கறபிஞ்சா.
வளரும் பகுதிகள் – வெப்ப மண்டல மழைக்காடுகள், இலையுதிர் காடுகளில் இயற்கையாக காணப்படுகிறது. தற்காலங்களில் பெரும்பான்மையான வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இனப்பெருக்கம் – இயற்கையாக விதைகள் மூலமாகவே இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. தற்காலங்களில் தண்டுகள் மூலமாகவும் புதிய செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தாவரத்தின் பயன்கள் – உணவிற்கு வாசனை தரும் பொருளாகவும், நோய்களை நிவர்த்தி செய்யும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மரத்தின் நன்றாக பருத்த அடித்தண்டுகள் வீட்டிற்கு தேவையான மர பர்னிச்சர்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
மருந்தாக பயன்படும் பாகங்கள் – பூ, காய், இலை, ஈர்க்கு, பட்டை, வேர் என அனைத்தும் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தாவரத்தின் தன்மை.
Characteristics of the curry leaf plant.
இது ஒரு சிறுமர பிரிவை சேர்ந்தது. 4 முதல் 8 மீட்டர் உயரம் மட்டுமே வளரும் இது 4 முதல் 12 அடி பரப்பளவில் கிளைகளை பரப்புகின்றன.
ஒவ்வொரு கிளைகளின் முடிவிலும் இலைகள் கொத்துக்கொத்தாக காட்சியளிக்கின்றன.

இதன் பெயர் வேப்பமரங்களை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் இது வேப்பமரங்களைப்போல அதிக அளவு உயரமாகவோ, பருமனாகவோ வளர்வதில்லை. இலைகளும் வேம்பின் இலைகளைப்போல கசப்பானவை அல்ல. மாறாக துவர்ப்பு தன்மையை உடையவை. மேலும் வேம்பின் இலைகளைவிட இதன் இலைகள் அளவில் கொஞ்சம் சிறியது. இருண்ட பச்சை நிறத்தை கொண்டது.
கருவேப்பிலை (Curry Leaf) கிளைகளிலுள்ள தண்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு பாடி கண்டிஷனரில் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் கிளைகளிலுள்ள குச்சிகளை பிரஷ் போல சதைத்து தொடர்ந்து பல் துலக்கிவர ஈறுகளும், பற்களும் வலுப்படுகின்றன என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்,… இதன் குச்சிகளை சதைத்து “பிரஷ்” போன்று செய்து நேரடியாக பல் விளக்க பயன்படுத்துவதால் அதன் கடினப்பகுதி ஈறுகளில் காயங்களை ஏற்படுத்தி பற்களை வலுவிழக்க செய்வதோடு ஈறுகளிலும் ஆறாத புண்களை ஏற்படுத்திவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
எனவே, இதிலிருந்து தப்பிக்க கருவேப்பிலை குச்சிகளை பற்களால் சதைத்து அதலிருந்துவரும் காரமான சாறுகளை மட்டும் வாயில் அடக்கிக்கொண்டு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் டூத் பிரஷ்களை கொண்டு துலக்குவதே சிறப்பு என்பதனை கவனத்தில் கொள்ளவும். இதே வழிமுறை வேம்பங்குச்சியால் பல் துலக்குபவர்களுக்கும் பொருந்தும்.

சரி, இனி கருவேப்பிலை மரத்தின் பிற தன்மைகளைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம்….
வளர்ந்த ஒரு மரத்தின் அடித்தண்டு சுற்றளவு அரை அடியிலிருந்து ஒன்றரை அடிவரை இருக்கலாம்.
இதன் மர பட்டைகள் சாம்பல் மற்றும் கருமை நிறத்தையே பிரதிபலிக்கின்றன. மேலும் பட்டைகளின் மேல் வெண்மை நிற சிறிய புள்ளிகள் ஏராளமாக காணப்படுகின்றன.
இம்மரத்தினுடைய ஆயுள் சுமார் 50 ஆண்டுகள்.
இலைகளின் தன்மை.
இலைகள் இறகுவடிவ கூட்டிலை வகையை சார்ந்தது. ஒரு இறகு வடிவ கூட்டிலையின் மொத்த நீளம் 4.7 அங்குலத்திலிருந்து 7.8 (12 – 20 செ.மீ) அங்குலம்வரை இருக்கின்றன.

இந்த இறகுவடிவ கூட்டிலையின் நடுத்தண்டிலிருந்து இருபக்கங்களிலும் எதிரெதிர் திசைகளில் ஒன்றிற்கொன்று மாறுதலான வரிசைகளில் தனித்தனி இலைகளை கொண்டுள்ளன.
இலைகள் முட்டை வடிவம் மற்றும் நீள்முட்டை வடிவ தோற்றம் தருகின்றன. இவ்விலைகளின் எண்ணிக்கை 5 லிருந்து 21 வரை இருக்கலாம்.
இவ்விலைகள் 1. 5 லிருந்து 5. 5 செ.மீ வரை நீளமும், 0. 5 லிருந்து 2. 8 செ.மீ அகலத்தையும் கொன்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் காரத்தன்மையுடன் கூடிய வாசனையையும் கொண்டுள்ளன.
இலைகளினுடைய இலைக்காம்புகள் சிறியவை. 3 லிருந்து 5 மி.மீ வரை மட்டுமே நீளம் கொண்டவை.

இவ்விலைகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல அவைகளின் முதிர்ந்த இலைகளின் விளிம்புகளை கூர்ந்து கவனித்தீர்களென்றால் மிக சிறியதான பல்லமைப்புகளைக் கொண்டுள்ளதையும் காணலாம்.
இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித வாசனை கலந்த எண்ணெய்யானது சோப்புகள் தயாரிக்கவும் சிலவகை அழகு சாதன பொருட்களுக்கு வாசனை கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பூக்களின் தன்மை.
இந்த கருவேம்பு மரமானது வசந்த காலத்திலும், கோடைகாலத்தின் துவக்கத்திலும் மலர்களை உருவாக்குகின்றன. அதாவது ஜூன் தொடங்கி நவம்பர் வரை பூக்கின்றன.
பூக்கள் பூங்கொத்து வகையை சேர்ந்தது. இதன் மஞ்சரியானது “காரிம்ப்” வகையை சார்ந்தது.

கிளைகளின் நுனிகளிலுள்ள மஞ்சரிகளில் 60 முதல் 90 க்கும் மேற்பட்ட வெண்ணிற சிறிய மதுரமான நறுமணத்தை கொண்ட பூக்களை மலரச்செய்கின்றன. பூவின் சராசரி விட்டம் சுமார் 1. 12 செ.மீ.
ஒரு தனிப்பட்ட பூவின் காம்புகள் மிகவும் குறுகியவை. காம்பினை அடுத்துள்ள புல்லிவட்டமானது (sepals) 1 மி.மீ நீளத்திற்கும் குறைவான அளவையே கொண்டுள்ளன. இந்த புல்லிவட்டம் பச்சை நிறத்தில் இதழ்போன்ற 5 முனைகளுடன் காணப்படுகின்றன.
புல்லிவட்டத்திற்கு அடுத்துள்ள அல்லிவட்டத்தில் தனித்தனியாக பிரிக்கப்பட்ட 5 பூ இதழ்கள் காணப்படுகின்றன. இந்த இதழ்களானது வெண்மையாக நீள் வட்ட வடிவத்தில் (ஈட்டி வடிவத்தில்) காணப்படுகின்றன. ஒவ்வொரு இதழ்களும் 4 லிருந்து 7 மி.மீ நீளத்தில் உள்ளன.
அதற்கு அடுத்துள்ள மகரந்த வட்டத்தில் ஒரு இதழுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில் மொத்தம் 10 மகரந்த தாள்கள் (Stamen) காணப்படுகின்றன. இந்த மகரந்த தாள்களின் நீளம் 4 முதல் 6 மி.மீ அளவில் உள்ளன. இவைகளின் தலைப்பகுதியில் மஞ்சள் பொட்டுபோல் காணப்படும் மகரந்தமானது (Anther) மலருக்கு விஷேச அழகினை கொண்டுவருகின்றன.

மகரந்த வட்டத்திற்கு மத்தியிலுள்ள கருப்பை (Ovary) யிலிருந்து மேலெழும்பிவரும் இலேசான பச்சை கலந்த வெண்ணிற சூல்தண்டு (Style) சுமார் 4 மி.மீ நீளத்தை பெற்றுள்ளன. இந்த சூல்தண்டின் தலைப்பகுதியில் இளம்பச்சை நிறத்தில் தொப்பி போன்ற அமைப்புடன் கூடிய வட்டவடிவ சூல்முடி (Stigma) காணப்படுகிறது. இவை எண்ணிக்கையில் ஒன்றுமட்டுமே உள்ளன.
&&&&&&&&&&&&&&&&&&&&
இதுவரையில் கருவேப்பிலையைப்பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் தாவரத்தின் தன்மை, இலைகளின் தன்மைகளோடு பூக்களின் தன்மைகளைப்பற்றியும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக வரும் இரண்டாவது பதிவில் கருவேப்பிலை (curry leaf) பற்றி மேலும் பல தகவல்களை பார்க்கலாம்… தொடருங்கள்….
இப்பதிவின் இரண்டாவது பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் (link) ஐ கிளிக்குங்க…