"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Cinnamon – Cinnamomum verum – Part 3

15 / 100

அடுத்து இதன் மற்றொரு இனமான “காசியா” பற்றி பார்ப்போம்.

பெயர் :- சின்னமன் காசியா   – Cinnamon Cassia .

அறிவியல் பெயர் :- Cinnamomum Cassia.

தாயகம் :- சைனா.

குடும்பம் :- Lauraceae – லாரசீ.

பேரினம் :- Cinnamomum.

இனம் :- C . Cassia.

Cinnamomum cassia Tree

இது சைனாவில் பயிராகும் ஒருவகையான கறுவா மரம் எனலாம். வெள்ளை நிற பட்டைகளுடன் பலதரப்பட்ட கிளைகளுடன் 7 மீட்டர் உயரம் வரை வளரும் பசுமையான மரம்.

இலைகள் 18 செ.மீ வரை நீளமுள்ளதாக இருக்கும். சிறிய மஞ்சள் நிற பூக்களை கொண்டது. கோடைகாலம் ஆரம்பமாகும் காலகட்டத்தில் பூக்கும் தன்மையுடையது.

சீனாவின் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் அடிப்படை மூலிகைகளுள் ஒன்றாக இது உள்ளது.

இந்த காசியாவை சீனா பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த காசியா கறுவாப்பட்டையில்கூட பலவகையான இனங்கள் உள்ளன.

சினமன் காசியா (cinnamon cassia) என்னும் இந்த இனம் சீனாவில் மட்டுமல்லாது மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிலும் பயிராகிறது.

இதிலிருந்து பெறப்படும் பட்டையே உலக அளவில் அதிகமாக  இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் உற்பத்தியாகும் சின்னமோமம் பட்டையைவிட இதுவே அதிக அளவில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான காரணம் இலங்கை பட்டையைவிட இது விலைமலிவு என்பதுதான்.

உண்மையாக சொல்லப்போனால் “சீனாவின் கறுவாப்பட்டை” என்ற பெயரில் விற்பனைக்குவரும் பட்டை உண்மையில் கறுவாப்பட்டையே அல்ல. இலங்கையில் உள்ள கறுவா மரத்திற்கும் இந்த சைனா கறுவா மரத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரமாகையால் இரண்டிற்கும் ஏறத்தாழ ஒரே மணம் ஒரே சுவை இருக்கிறது அவ்வளவே.

Real cinnamon vs Fake cinnamon

ஆனால் இரண்டிற்குமே வடிவத்திலும், குணங்களிலும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன.

அது எப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பொருள்கள் வெவ்வேறு குணங்களை பெற்றிருக்க முடியும் என்கிறீர்களா?

அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் வீட்டில் வளரும் பூனையும், காட்டில் வளரும் புலியும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவேறு விலங்குகள்தான் என்கிறார்கள்.

உண்மைதான்.

அதற்காக. இரண்டின் குணங்களும் ஒன்றாகிவிடுமா?

இரண்டும் ஒரே குடும்பத்தை சார்ந்த விலங்குகள் என்பதற்காக பூனையைப்போல புலியையும் மடியில்போட்டு கொஞ்சத்தான் முடியுமா? 

அப்படி கொஞ்சினால் என்னவாகும்?

கொத்தோடு வாழ்க்கை கோவிந்தாவாகிவிடும் அல்லவா.  அதுபோலத்தான் இதுவும்.

வெறும் சுவை, மணம் மட்டுமல்ல இலங்கை கறுவாப்பட்டையில் இல்லாத ஒரு சிறப்பான ஸ்பெஷல் குணம்  “சீன கறுவாப்பட்டை” என்ற பெயரில் மலிவாக விற்பனை செய்யப்படும் Cinnamon Cassia (CC ) பட்டையில் உள்ளது.

அது என்ன என்று கேட்கிறீர்களா.. “விஷம்”.

ஆம்.. விஷமேதான்!.

விஷம் என்றால் சாதாரண விஷமல்ல. உங்கள் கல்லீரலையே கலங்கடிக்கும் “விஷம்”. 

இன்னாது… விஷமா?!…

அதிர்ச்சியாக இருக்கிறதா….

அப்படியென்றால் இதில் உடலுக்கு நன்மை செய்யும் தன்மைகள் எதுவுமே இல்லையா?… என கேட்கத் தோன்றுகிறதா?

உங்கள் கேள்விக்கான பதில்…. ஏராளமான நன்மைகளும் உள்ளன என்பதுதான்….

பொதுவாக எந்த வகை கறுவாப்பட்டையாக இருந்தாலும் அதில் உடலுக்கு நன்மை செய்யும் சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது உண்மையே. அத்தனை சத்துக்களுமே உடலுக்கு நன்மை விளைவிப்பதுதான்… ஒரே ஒரு சத்தைத்தவிர அதுதான் “கூமரின்” (coumarin).

“கூமரின்” என்பது என்ன… அது ஒரு வகை விஷம். நம்முடைய கல்லீரலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும் திறன் கொண்ட விஷம். அனைத்துவகை இலவங்கப்பட்டையிலுமே இந்த விஷப்பொருள் உள்ளது என்றாலும் ஒவ்வொன்றிலும் அதன் விகிதாசாரம் மாறுபடுகிறது.

உண்மையிலேயே இந்த “கூமரின்” முழுக்க முழுக்க உடலுக்கு தீங்குவிளைவிக்கும் பொருள்தானா? என்று கேள்வி எழுப்பினால்… கண்டிப்பாக தீங்கு விளைவிக்கும் பொருள் இல்லை.

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த “கூமரின்” உடலுக்கு நன்மை செய்யும் ஒரு சத்துப்பொருள்தான். குறிப்பாக இது ஆண்டிபயாடிக்காக செயல்படும் அற்புதமான ஒரு சத்துப்பொருள்.

அதுமட்டுமல்லாமல், சிதைந்த கணைய செல்களை சீர்படுத்தி புதுப்பிக்கும் மூலப்பொருள். அதுமட்டுமல்லாமல் இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்கின்றன. இதனால் சர்க்கரை நோயும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் இதுவெல்லாம் உணவில் கூமரின் அளவோடு இருக்கும் வரைக்கும்தான்.

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்பதுபோல உணவுப்பொருளில் கூமரின் அதிகரித்தால் அது கல்லீரலை சிதைக்கும் திறனை பெற்றுவிடுகின்றன. எனவேதான் இந்த கூமரினை அளவுக்கு அதிகமாக கொண்டுள்ள சீன இலவங்கப்பட்டையை தீங்கிழைக்கும் பொருளாக வகைப்படுத்துகிறோம்.

இலங்கையில் உற்பத்தியாகும் இலவங்கப்பட்டையை விட சீனாவில் உற்பத்தியாகும் காசியா இலவங்கப்பட்டையில் அதிக அளவில் கூமரின் (Coumarin)  உள்ளதால் சீன இலவங்கப்பட்டை தரங்குறைந்தது மட்டுமல்லாது உடலுக்கு மிகவும் தீங்கிழைப்பதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் குறைந்த அளவு கூமரின் உடலுக்கு பலவிதத்திலும் நன்மை தருவது என்றாலும் அளவு அதிகரித்தால் அது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால்.

இலங்கையிலிருந்து வரும் சுருள் இலவங்கப்பட்டையில் கூமாரின் 0.0004% மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய அளவில் தீங்கு இல்லை. நன்மையும்கூட.

ஆனால், சீனாவின் இலவங்கப்பட்டையான Cassia (காசியா) என்னும் தடித்த வடிவமுடைய இலவங்கப்பட்டையில் இதன் அளவு பன்மடங்கு அதிகம். ஏறத்தாழ 5% உள்ளது. அதாவது 5 கிராம் இலவங்கப்பட்டையில் 10 முதல் 30 மில்லி கிராம் வரை உள்ளது. எனவேதான் சீனாவின் “காசியா” ஆபத்தானது என்கிறோம்.

அனைத்து வகையான இலவங்கப்பட்டைகளையும்விட சிலோன் பட்டையே பாதுகாப்பானது. உடலுக்கு அதிக அளவில் நன்மை பயப்பது. ஆனால் இதன் விலை சைனா இலவங்கப்பட்டையைவிட 5 மடங்குவரை அதிகம் என்பதால் இதை தவிர்த்து விலைமலிவான உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் சைனா பட்டையையே அதன் ஆபத்தை உணராமல் மக்கள் வாங்கிச் செல்கின்றனர் என்பது வேதனை.

கூமரின் என்னும் பொருள் அளவு அதிகரிக்கும்போது கல்லீரலுக்கு தீங்கு விளைவிப்பதோடு புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் காசியா இலவங்கப்பட்டையை உட்கொள்வதால் 6 வகையான பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

இது நுரைஈரல், கல்லீரலில் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

இதய நோய் ஏற்படலாம்.

ஆஸ்துமா நோயுள்ளவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

எனவே சைனா கறுவாப்பட்டையை தவிர்ப்பது நலம். ஆனால் மார்க்கெட்டில் இதுதான் அதிக அளவில் விற்பனையாகிறது.

இந்த சைனா பட்டை நம் நாட்டில் ஒரு வருடத்திற்கு பல்லாயிரம் டன்களுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

சரி Ceylon மற்றும் Cassia வை எவ்வாறு இனம் கண்டறிவது.

Ceylon Cinnamon இலவங்கப்பட்டை மிக மெல்லியதாக எளிதில் உடையும் வண்ணம் இருப்பதால் ஒன்றிற்குள் ஒன்றாக அடுக்கடுக்காக பல பட்டைகளை வைத்து சுருட்டியிருப்பார்கள். இதனாலேயே இதனை ‘சுருள்பட்டை‘ என்றும் அழைக்கின்றனர். பல சுருள்களுடன் கனமே இல்லாமல் எளிதில் உடையும் தன்மையில் இது இருக்கும்.

Ceylon Cinnamon

ஆனால் சீனா இலவங்கப்படடையோ தனித்த பட்டைகளாக இருக்கும். மேலும் இது கடினமானது. இதனை தூளாக்குவதும் மிக கடினம். எனவே இதன் வித்தியாசங்களை அறிந்து தரமானதாக வாங்குவது முக்கியம்.

Cinnamon Cassia

Ceylon என்னும் இலங்கையின் ஒரிஜினல் பட்டையை வாங்குவதற்கு நீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. online ல் ஆர்டர் பண்ணினால் வீடுதேடி வருகிறது. அமேசான் தளத்திலும் கிடைக்கிறது.

இது கொழுப்பை குறைக்கும் அல்லது நீரழிவை கட்டுப்படுத்தும் என்று பொதுவாக பலரால் சொல்லப்பட்டு வந்தாலும் இது இன்னமும் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் இலவங்கப்பட்டையை முகப்பரு முதலியவைகளுக்கு முகத்தில் தடவுவதால் குணமாகும் என்று இதுவரை எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.

இதன் தூளாக்கப்பட்ட பொடியை சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில், இலவங்கப்பட்டை தூளை சுவாசித்தால் நுரைஈரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இலவங்கப்பட்டையில் நார்த்தன்மை அதிகமென்பதால் இதன் தூளாக்கப்பட்ட பொடி சாதாரண கண்கள் மூலம் பார்ப்பதற்கு பொடிபோல் தெரிந்தாலும் நுண்ணோக்கிமூலம் பார்த்தீர்கள் என்றால் இதன் ஒவ்வொரு துகளும் சிறு சிறு குச்சி போன்ற வடிவத்தில்தான் இருக்கும். (சாதாரணமாக பிற மருந்து பொடிகளை நுண்ணோக்கிமூலம் ஆராய்ந்தால் பெரும்பாலும் அவைகள் உருண்டை வடிவில் இருக்கும்).

எனவே, இதனை ஏதாவது ஒரு திரவம் அல்லது தேன், நெய் இவைகளில் நன்கு குழப்பி அதன் பின்பே சாப்பிடவேண்டும். அதை விடுத்து “நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்” என்று டயலாக் விட்டுக்கொண்டு பொடியை அள்ளி வாயில் போட்டீர்கள் என்றால் உங்களின் மூச்சுக்காற்றோடு கலந்து அதன் துகள்கள் நுரைஈரலுக்குள் சென்றுவிடும்.

அவ்வாறு செல்லும் துகள்களை வெளியேற்றுவது என்பது நுரைஈரலுக்கு அவ்வளவு எளிதான வேலையன்று. ஏனெனில், இத்துகளின் அமைப்பு குச்சிபோன்று இருப்பதால் நுரைஈரல் சுவர்களில் தைத்துக்கொண்டு வெளியேறமாட்டேன் என்று அடம்பிடிக்கும். எனவே நுரைஈரலால் இதனை வெளியேற்றுவது மிகவும் கடினமான வேலையென்பதால் அது வேறுவிதமான நுரைஈரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் .

cinnamon powder

எனவே கறுவாப்பட்டை என்னும் இலவங்கப்பட்டைப்பொடியை எக்காரணம் கொண்டும் இரண்டாவதாக தண்ணீர் குடித்துக்கொள்ளலாம் என்று அப்படியே அள்ளி வாயில் போட்டு விடாதீர்கள்.

மாறாக, ஏதாவது ஒரு நீர்ம பொருளுடன் நன்கு கலக்கியே அருந்துதல் வேண்டுமென உடல்நல வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை பொதுவாக தேனுடன் கலந்து சாப்பிடுதல் சிறப்பு.

இதை மருந்துகளுக்காகட்டும் அல்லது சமையலுக்காகட்டும் அளவறிந்து பயன்படுத்தவேண்டும். ஏனெனில் இதை அதிக அளவில் உட்கொண்டால் இரத்தத்தை நீர்த்துப்போக செய்யும் தன்மை கொண்டது. இதனால் உடலில் எதாவது காயம்பட்டால் உடனடியாக இரத்தம் உறையாமல் தொடர்ந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும்படியான ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும் சூடான உடலை கொண்டவர்கள் இதனை அதிக அளவில் உட்கொண்டால் தலைவலி ஏற்படும். நீர்பைக்கும் கெடுதல் விளைவிக்கும் என கூறப்படுகிறது.

எனவே இலவங்கப்பட்டை ஒரு நாளைக்கு அதிகப்படியாக 5 கிராம் அளவே எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சைனாவின் காசியா இலவங்கப்பட்டை மிக குறைந்த அளவில் எடுத்துக்கொண்டாலும் ஆபத்தைத்தரும் எனவே அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது இதற்கும் பொருந்தும். எனவே இதனை மருந்தாக பயன்படுத்த வேண்டுமேயொழிய விருந்தாக பயன்படுத்துதல் கூடாது.

ரெடிமேடாக கடைகளில் விற்கப்படும் லவங்கப்பட்டை தூளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் அது பெரும்பாலும் உடல் நலத்தைக் கெடுக்கும் சீன காசியா பட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கும். எனவே உண்மையான Ceylon cinnamon பட்டையை வாங்கி நாமே உரலிலிட்டு பொடித்து எடுத்துக் கொள்வதே சிறப்பு. நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!