"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Cinnamon – Cinnamomum verum – Part 2

15 / 100

உடலுக்கு ஊட்டம் தரும் உணவே உடலை பேணிக்காக்கும் மருந்தாகவும் பயன்படவேண்டும் என்னும் உயரிய நோக்கில்  நம் முன்னோர்கள் மருத்துவ தன்மை வாய்ந்த பல இயற்கை பொருட்களை உணவோடு உணவாக பயன்படுத்திவந்தனர். அதிலொன்றுதான் கறுவாப்பட்டை.

“இலவங்கப்பட்டை” என்று அழைக்கப்படும் “கறுவாப்பட்டை” யைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்துவருகின்றோம்.

இது இரண்டாவது பகுதி [PART 2].

இதன் முதல் பகுதியில் [PART 1] இலவங்கப்பட்டையின் பொதுவான தன்மைகளைப்பற்றியும், அதன் பயன்பாடுகளைப்பற்றியும் பார்த்தோம்.

இலவங்கப்பட்டை என்று பரவலாக அழைக்கப்படும் கறுவாப்பட்டையில் பலவகைகள் இருந்தாலும் முக்கியமாக இருவகைகள் உள்ளன. அவை

  1. இலங்கை கறுவாப்பட்டையான “true Cinnamon” (Cinnamonum zeylanicum (CZ) என்னும் Ceylon cinnamon (சிலோன் சின்னமன்).
  2.  சீன கறுவாப்பட்டையான “regular Cinnamon” (ரெகுலர் பட்டை) என்னும் Cinnamon Cassia (CC ) (காசியா சின்னமன்).
Cassia with Ceylon

இந்த இருவகை கறுவாப்பட்டைகளும் தரத்திலும், குணத்திலும் பல வகைகளில் வேறுபடுகின்றன. எனவே இரண்டாவது பகுதியாகிய [PART 2] இந்த பதிவில் இந்த இருவகையான பட்டைகளின் மருத்துவக் குணங்களை பற்றி தனித்தனியாக பார்க்க இருக்கின்றோம்.

வாருங்கள் பார்க்கலாம்…

முதலில் இலங்கையில் உற்பத்தியாகும் “சிலோன் சின்னமன்” (Ceylon cinnamon) ஐ பற்றி பார்க்கலாம்.

இதன் தாயகம் இலங்கை. கறுவாப்பட்டையில் இதனை உண்மையான அதாவது “True Cinnamon” என அழைக்கின்றனர். காரணம் இதுவே பல அற்புதமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது மட்டுமல்லாது உடலுக்கு பல நன்மைகளையும் பெற்றுத்தருகிறது.

இது ஆரம்பத்தில் இலங்கையில் மட்டுமே உற்பத்தியான இனம். அதன்பின் அங்கிருந்து இந்தியா, மலேசியா, தாய்லாந்து, மடகாஸ்கர், பிரேசில், கரீபியா, பங்களாதேஷ், மியான்மர் முதலிய நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கும் பயிர் செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் கேரளாவில் அதிகம் பயிர் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் இதன் பட்டையை பதப்படுத்தப்பட்டு “தால் சீனி” (Dalchini) என்ற பெயரிலும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த சிலோன் சின்னமன் தாவரமானது 15 மீட்டர் உயரம் வளரும் இயல்புடையது. இலைகள் 7 லிருந்து 18 செ.மீ வரை சிறிய வெற்றிலை வடிவத்தில் உள்ளன. பூக்கள் மிக சிறியது. இது பச்சை நிறத்தில் ஒரு வித வாசனையை கொண்டுள்ளன.

Cinnamomum verum

இரண்டு வருடங்கள் வளர்ந்த மரத்தின் அடிப்பகுதியில் கிளைக்கும் கிளைகளின் மெல்லிய மேற்பட்டை நீக்கப்பட்டு வாசனை பொருந்திய உள்பட்டை உலர்த்தப்பட்டு 10 செ.மீ நீளத்திற்கு துண்டு துண்டாக வெட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

பிற நாடுகளில் உற்பத்தியாகும் கறுவா பட்டையைவிட இலங்கையில் உற்பத்தியாகும் கறுவாப்பட்டையே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மென்மையாகவும் கசப்பு சுவை குறைவாகவும் மருதமான சுவை கொண்டதாகவும் நல்ல வாசனையாகவும் எளிதில் நொறுங்கும் தன்மையுடனும் உள்ளது.

இதுவே “உண்மையான” (true ) இலவங்கப்பட்டை என்று அழைக்கப்படுகிறது. இதுவே அதிக விலையுள்ளது. இலங்கையை தவிர பிற இடங்களில் உற்பத்தியாகும் பட்டைகள் தரத்தில் சிறிது குறைந்தவையே.

இலங்கையில் உற்பத்தியாகும் இனமான சிலோன் சின்னமனின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்.

பொதுவாக இதன் வாசனையை நுகர்வதால் மூளை சுறுசுறுப்படைந்து நினைவாற்றல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மனஅழுத்தத்தையும், மன இறுக்கத்தையும் சீர் செய்யும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வளர்ச்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. இரத்தத்திலுள்ள மாசுகளை நீக்கி நரம்பு மண்டலங்களை சீர்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.

இரத்தத்தை நீர்க்கச் செய்யும் தன்மையுள்ளதாதலால் இரத்தம் உறைதலால் ஏற்படும் மாரடைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சிலோன் கறுவாப்பட்டையை முறையாக பயன்படுத்திவர செரிமானத்தை மேம்படுத்துவதோடு வயிற்றுக்கடுப்பு, இரத்தக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, உள்மூலம், ஆசனப்புண், குடல் எரிச்சல் மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை நீங்குவதோடு வயிற்றிலுள்ள நச்சுப் பொருட்களையும் அழிக்கும்.

இதனை சிறு துண்டுகளாக்கி வாயில் அடக்கிக் கொள்ள இருமல் தணியும். வாந்தி, பல்வலி முதலிய அனைத்தையும் போக்கும்.

சிலந்தி மற்றும் பூச்சி கடிக்கு கறுவாப்பட்டையை அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட விஷம் நீங்கும்.

மேலும், இந்த கறுவாப்பட்டையானது பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் முழுவதுமாக வெளிப்படாமல் தடைபட்டு நிற்கும் இரத்தத்தை விரைந்து வெளியேற்றும். குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கறுவாப்பட்டை கஷாயம் கொடுத்துவர கருப்பை சுருங்கி இயல்பான தன்மைக்கு வரும்.

அண்மையில் ஆய்வாளர்கள் இலவங்கப் பட்டையிலிருந்து பெறப்பட்ட சாற்றை எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்தனர். அதில் மறதி நோயான “அல்சைமர்” (Alzheimer’s) நோய்க்கு நல்ல பலன் கிடைப்பதைக் கண்கூடாக கண்டறிந்தனர். இது மூளை நரம்புகளில் ஏற்படும் அழற்சியையும், செயலிழப்பையும் தடுக்கின்றன என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.

லவங்கப்பட்டை சூரணத்தை 750 மி .கி அளவு எடுத்து நெய்யுடன் குழைத்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

நகமும் சதையும்போல, பூவும் மணமும்போல என வாழ்த்துவதைவிட இலவங்கப்பட்டையும் தேனும்போல என வாழ்த்துவதே சிறப்பு . ஏனெனில் இவைகள் இரண்டும் இணைவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

ஒரு பாத்திரத்தில் தேன் விட்டு அதனை வெந்நீர் பாத்திரத்தில் வைத்து சூடாக்கி அந்த தேனுடன் லவங்கப்பொடி கலந்து குழப்பி 3 முதல் 4 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஜலதோஷம், இருமல், சைனஸ் தணியும்.

வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன்கலந்து குடித்து வர சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும்.

ஒரு ஸ்பூன் தேனுடன் கால் ஸ்பூன் அளவு இலவங்கப்பொடி கலந்து சாப்பிட்டுவர இருமல், கபம், சளி முதலியன நீங்கும்.

இலவங்கப்பட்டையை சிறிது வறுத்து இடித்து வைத்துக்கொள்ளவும்.  இதனை காலையும் மாலையும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டுவர மூளை, இருதயம் முதலிய உறுப்புகள் வலிமை பெறுவதோடு வயிறிலுள்ள வாய்வையும் கண்டிக்கும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

லவங்கப்பட்டையை பொடித்து நீரிலிட்டு காய்த்து வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளிக்க பல்வலி, வாய்நாற்றம் நீங்கும்.

இதிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய் உஷ்ண குணமுடையது என்பதால் குளிர்ச்சியால் ஏற்படும் சகல நோய்களுக்கும் பயன்தரும்.

பல்வலி, மூட்டுவலி, தலைவலி இவைகளுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் காலில் ஏற்படும் புண்கள், விரல் இடுக்கு, நகம் இவைகளில் ஏற்படும் பூஞ்சை காளான்களை குணப்படுத்தவல்லது.  லவங்கப்பட்டை எண்ணெய் ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினி. அதற்கு காரணம் இதிலுள்ள “சின்னமால் டீ ஹைட்”  என்னும் வேதிப்பொருளே ஆகும்.

கறுவாப்பட்டை டீ குடித்து வர ஆரோக்கியம் மேம்படும்.

இந்த டீ தயாரிப்பதற்கு தேவைப்படும் கறுவாப்பட்டை என்று சொல்லப்படும் இலவங்கப்பட்டைப்பொடியை ரெடிமேடாக கடைகளில் வாங்குவதைவிட நீங்களே தயாரித்துக்கொள்வதே சிறப்பு…

ஏனெனில் கடையில் வாங்கும் இலவங்கப்பொடி தரம் குறைந்த சைனா பட்டையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம். எனவே இதற்கு தேவைப்படும் பொடியை சிலோன் ஒரிஜினல் கருவாப்பட்டையை வாங்கி நீங்களே அரைத்து தயாரித்துக்கொள்ளுங்கள். 

Cinnamon Tea

அரை லிட்டர் டீ டிக்காஷனுடன் இரண்டு டீஸ்பூன் தேனும் 3 டீஸ்பூன் கறுவாப்பட்டை தூளும் சேர்த்துக் காய்ச்சி இறக்க கமகமக்கும் இலவங்கப்பட்டை டீ ரெடி !.

உயர்தரமான சிலோன் ஒரிஜினல் இலவங்கப்பட்டை, றூமிமஸ்தகி, சோம்பு இவைகளின் சூரணம் சமனெடை எடுத்துக்கொள்ளவும். இவற்றின் மொத்த எடைக்கு சமமாக கற்கண்டு சூரணத்தையும் (சூரணமென்பது மிருதுவாக பொடிக்கப்பட்ட தூள் அல்லது பொடி) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதனை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவில் சாப்பிட்டுவர இரைப்பை பலம்பெறும். வயிற்றிலுள்ள அசுத்த மாசுக்களை நீக்கும். ஜீரணசக்தியை அதிகப்படுத்தும், சீத பேதியை தடுத்து நிறுத்தும். 

உயர்தரமான சிலோன் ஒரிஜினல் இலவங்கப்பட்டையை உரலிலிட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அவ்வாறு இடித்தெடுத்த தூள் – 1 கிலோ.

சுத்தமாக செக்கிலிட்டு ஆட்டியெடுக்கப்பட்ட நல்லெண்ணெய் – 600 மி .லி.

ஒரு பீங்கான் பாத்திரத்தில் இலவங்கப்பட்டை தூளுடன் நல்லெண்ணெய் கலந்து 20 நாள் கடும் வெயிலில் வைக்கவும். தினந்தோறும் நன்றாக கிளறிவிடவும்.

20 நாட்கள் கழித்து எண்ணைய்யை வடித்தெடுத்துக்கொள்ளவும். இதுவே அனைவராலும் எளிமையாக தயாரிக்கக் கூடிய இலவங்கப்பட்டை எண்ணெய்.

Cinnamon Oil

இந்த எண்ணையை உடலில் பூசுவதால் கைகால் நடுக்கம், வாய் கோணல், முகம் கோணல், மயிர்கூச்சம் முதலியன நீங்கும்.

அட,… சிலோன் சின்னமன்-ல் இவ்வளவு நன்மைகளா?!… அப்படியென்றால் இதில் தீமைகளே இல்லையா என்றால்,…. தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன…

இதன் தூளாக்கப்பட்ட பொடியை சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில், இலவங்கப்பட்டை தூளை சுவாசித்தால்… அது எந்த வகையான இலவங்கப்பட்டையாக இருந்தாலும் நுரைஈரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இலவங்கப்பட்டையில் நார்த்தன்மை அதிகமென்பதால் இதன் தூளாக்கப்பட்ட பொடியை சாப்பிட முற்படும்போது புரையேறினால் அந்த தூள் நுரைஈரலுக்குள் சென்று ஆஸ்துமா, கேன்சர் முதலிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்…. ஐயகோ… அப்படியென்றால் இதனை பாதுகாப்பாக எப்படித்தான் பயன்படுத்துவது என்கிறீர்களா?…

அதனை தொடர்ந்துவரும் அடுத்த பதிவில் பார்க்கலாம்….

[தொடர் தொடரும்…]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!