"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Curry Leaf Tree – Part 2

17 / 100

கறிவேப்பிலை மருதமான ஒருவித வாசனையை கொண்டிருப்பதால் உணவுப்பொருள்களுக்கு வாசனை கொடுப்பதில் இது முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.

உணவிற்கு வாசனை ஊட்டும் பொருட்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் கருவேப்பிலையைப் பற்றித்தான் நாம் தொடர்ந்து பார்த்துவருகின்றோம்.

கருவேப்பிலையைப் பற்றிய தொடர் பதிவில் இது இரண்டாவது பகுதி (PART 2).

முதல் பகுதியில் கருவேப்பிலையைப் பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் தாவரத்தின் தன்மை, இலைகளின் தன்மைகளோடு பூக்களின் தன்மைகளைப்பற்றியும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியான இரண்டாவது பகுதியாகிய இப்பதிவில் காய்களின் தன்மை, விதை மற்றும் வேர்களின் தன்மைகளோடு அதன் மருத்துவத் தன்மைகளையும் பார்க்க இருக்கின்றோம்… முதலில் கொத்துக்கொத்தாக கண்ணைப்பறிக்கும் அழகுடன் காட்சிதரும் காய்களைப்பற்றி பார்ப்போம்.

கறிவேப்பிலை மரங்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்களை உற்பத்தி செய்கின்றன.

murraya_koenigii_Pods
கருவேப்பிலை காய்கள்.

கறிவேப்பிலையின் காய்கள் வழக்கம்போல் பச்சைநிறமாகவே உள்ளன. அதன்பின் அவைகள் நாட்கள் செல்லச்செல்ல பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. அவ்வேளையில் காய்கள் பச்சையும் சிவப்பும் கலந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

Curry leaf tree fruit

பச்சை நிறத்திலிருந்து முழுமையாக கண்களை பறிக்கும் சிவப்பு நிறத்திற்கு மாறிய காய்கள் கனிய கனிய கருப்பு நிறத்திற்கு மாறுகின்றன. அவ்வேளையில் சிவப்பும் பளபளக்கும் நாவற்பழ கருப்புமாக காட்சிதரும் பழங்கள் உண்மையிலேயே நம் உள்ளத்தை கொள்ளையடிக்கின்றன.

Murraya Koenigii_Curry leaf tree fruit

அதன்பின் ஓரிரு நாட்களில் அனைத்தும் கனிந்து வழுவழுப்பான தோற்றத்துடன் பளபளக்கின்றன.

கருமை நிறமான இந்த பழங்கள் பட்டாணி அளவில் பளபளப்புடன் அழகாக காட்சியளிக்கின்றன.

Indian-Curry-Leaf-Tree-fruit

இந்த பழங்கள் 10 லிருந்து 16 மி.மீ நீளமும், 10 லிருந்து 12 மி.மீ அகலத்தையும், 880 மி.கி அளவு எடையையும் கொண்டுள்ளன.

காரமான வாசனையை கொண்டுள்ள இந்த பழங்களினுள் 1 அல்லது 2 எண்ணிக்கைகளில் பச்சை நிற விதைகள் காணப்படுகின்றன.

விதைகள் 8 மி.மீ நீளத்தையும், 7.5 மி.மீ அகலத்தையும், 445 மி.கிராம் அளவு எடையையும் கொண்டுள்ளன.

ஒரு பழத்தினுள் 1 விதை மட்டுமே இருந்தால் அவ்விதையானது மேற்கண்ட அளவுகளிலும், இருவிதைகள் இருந்தால் இருவிதைகளும் அளவில் கொஞ்சம் சிறியதாகவும் காணப்படுகின்றன.

Indian Curry Leaf seeds

விதைகளை சுற்றி லேசான ஊதாநிற சதைகள் கூழ் வடிவில் காணப்படுகின்றன. இந்த சதைகளை நாம் உணவாக உட்கொள்ளலாம். பழங்கள் உண்பதற்கு இனிமையாகவும், காரமான ஒருவித வாசனையையும் கொண்டுள்ளன.

பழங்கள் சத்து நிறைந்தவை மட்டுமல்ல. மருத்துவகுணமும் கொண்டவை. ஆனாலும் இதில் குறிப்பிட்டு சொல்லும்படி அதிக அளவு சதைப்பற்று இல்லையென்பதாலும். சதைப்பகுதியையும், விதைப்பகுதியையும் பிரித்து சாப்பிட அதிகம் பொறுமை தேவைப்படுவதாலும் யாரும் இதனை அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை.

ஆனால், பறவைகள் இதனை விரும்பி சாப்பிடுகின்றன. பறவைகள் மூலமாகவே தொலைதூரங்களுக்கு விதைகள் எடுத்துச்செல்லப்பட்டு இவ்வினங்கள் வேகமாக பரவுவதற்கு வழியேற்படுகின்றன. ஆனால் பாலூட்டிகளான விலங்குகள் இப்பழங்களை சாப்பிடுவதில்லை. அதற்கான காரணங்களும் உள்ளன. அதனை பின்னால் பார்க்கலாம்.

பழத்தின் பாதிக்கும் அதிகமான பகுதியை விதைகளே ஆக்கிரமித்துள்ளன. பழத்தில் உண்ணக்கூடிய பகுதி 45 சதவீதம் மட்டுமே.

இந்த பழத்தில் “வைட்டமின் A” மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் நிறையவே உள்ளன.

கருவேப்பிலை பழங்களை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பூச்சிகள் கடித்த இடங்களில் தடவிவர அதன் பாதிப்புகள் அகலும்.

[100 கிராம் பழச்சதையில் அடங்கியுள்ள சத்துக்கள்]

English NameTamil NameNutrient value
Waterநீர்64. 9 %
Sugarசர்க்கரை9. 76 %
Vitamin Cவைட்டமின் C13. 35 mg
Proteinபுரதம்1. 97 g
Phosphorusபாஸ்பரஸ்0. 082 g
Potassiumபொட்டாசியம்0. 811 g
Calciumகால்சியம்0. 166 g
Magnesiumமெக்னீசியம்0. 216 g
Ironஇரும்பு0. 007 g

பிற விதைகளைப்போல் இவைகள் பாதுகாப்புக்காக கடினமான ஓடுகளை பெற்றிருக்கவில்லை. பாலித்தீன் பேப்பரைப்போல ஒளி ஊடுருவும் தன்மைகொண்ட மிக மிக மெல்லிய தோல் போன்ற அமைப்பையே கொண்டுள்ளன. எனவே அதனுள்ளிருக்கும் பச்சைநிற இரு வித்திலைகளும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இதன்வழியாக வெளிப்பட்டு தெரிவதால்தான் பார்ப்பதற்கு இவ்விதைகள் பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

Curry Leaf  tree seeds

இந்த விதைகள் இலைகளைப்போலவே காரத்தன்மை கொண்டதாகவும் ஓரளவு வாசனைகொண்டதாக இருந்தாலும் கூட இவைகள் இலைகளைப்போல சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் விதைகளிலுள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில இரசாயன மூலக்கூறுகள்.

இதன் விதைகளிலுள்ள சில ரசாயன மூலக்கூறுகள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ஜீரணமண்டலங்களில் “குடல் அழற்சி” போன்ற சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கடினமான பாதுகாப்பு ஓடுகள் எதுவும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் விதைகள் விலங்குகளால் வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதனால் இயற்கையானது அதனை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த தற்காப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

ஆனால் பறவைகளின் உடலில் இது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. அதன் ஜீரணமண்டலங்களால் விதைகள் சிதைக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் பறவைகள் மூலமாகவே இதன் விதைகள் தொலை தூரங்களுக்கு பயணிக்கின்றன என்பதால்.

எனவே மனிதர்களாகிய நாம் இதன் பழங்களை ருசிபார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். விதைகளோடு சடுகுடு விளையாடுகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள். மீறினால் “இரைப்பை வறட்சி” மற்றும் “குடல் அழற்சி” என்னும் வலிமிகுந்த நோயுடன் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

எனவே குழந்தைகளாகட்டும் அல்லது பெரியவர்களாகட்டும் பழங்களுடன் சேர்த்து விதைகளையும் சாப்பிட அனுமதிக்கவேண்டாம். சதைகளை சாப்பிட்டுவிட்டு விதைகளை துப்பிவிட வலியுறுத்துங்கள்.

பழங்களை விரும்பி உண்ணும் பறவைகளால் விதைகள் வெகுதூரங்களுக்கு கடத்தப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. தற்காலங்களில் இதன் கிளைகளை ஒடித்து நட்டு வைப்பதின் மூலமாகவும் புதிய செடிகளை உற்பத்தி செய்கின்றனர்.

இதனுடைய வேர்பட்டையானது சிறுநீரகங்களில் ஏற்படும் வலிகளை நீக்கும் தன்மையுடையது.

சிறுநீரகம் சம்பந்தமான வலிகளுக்கு வேர்களிலிருந்து எடுக்கப்படும் சாறு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இந்த வேருக்கு கெட்டிப்பட்ட மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு.

வேர்ப்பட்டையை ஊறவைத்த நீரை 60 மில்லி அளவு தினம் இருவேளை அருந்திவர வாந்தி நிற்கும்.

கருவேப்பிலையில் அடங்கியுள்ள சத்துக்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகளைப் பற்றி பார்ப்போம்.

English NameTamil Name
beta-Pineneபீட்டா பினீன்
alpha-Pineneஆல்பா பினீன்
beta-Caryophylleneபீட்டா-கேரியோபிலீன்
beta-Phellandreneபீட்டா-பெல்லன்ட்ரீன்
beta-sitosterolபீட்டா-சிட்டோஸ்டெரால்
O-methyl murrayamine AO-மெத்தில் முர்ரமைன் A
O-methyl mahanineO-மெத்தில் மகானைன்
Calciumசுண்ணாம்பு சத்து
Magnesiumமக்னீசியம்
Ironஇரும்பு
Copperதாமிரம்
Phosphorusபாஸ்பரஸ்
Sulphurகந்தகம்
Chromiumகுரோமியம்
Chlorineகுளோரின்
Carbazoleகார்பஸோல்
cyclomahanimbineசைக்ளோமஹானிம்பைன்
Scopolinஸ்கோப்போலின்
Proteinபுரதம்
Fatsகொழுப்பு
Fiberநார்ச்சத்து
Vitamin A [beta-carotene]வைட்டமின் A [பீட்டா கரோட்டின்]
Vitamin B1 [thiamine]வைட்டமின் B1 [தயாமின்]
Vitamin B2 [riboflavin]வைட்டமின் B2 [ரிபோ ஃப்ளவின்]
Vitamin B3 [niacin]வைட்டமின் B3 [நியாசின்]
Vitamin B9 [folic acid]வைட்டமின் B9 [ஃபோலிக் அமிலம்]
Vitamin C [ascorbic acid]வைட்டமின் C. [அஸ்கார்பிக் அமிலம்]
Vitamin Eவைட்டமின் E
Isomahanineஐசோமஹனைன்
Isomurrayazolineஐசோமுர்ரயஸோலைன்
Isomurrayazolinineஐசோமுர்ரயாசோலைனின்
Koenineகோயினின்
Koenidineகோனிடின்
Koenigineகோயினிஜின்
Koenimbineகோயின்பைன்
Mahanimbinineமஹானிம்பினைன்
Mahanimbolineமஹானிம்போலைன்
Mahanimbinolமஹானிம்பினோல்
Mahanimbicineமஹானிம்பிஸைன்
Mahanineமஹானைன்
Mukonicineமுகோனைஸின்
Mukoeic acidமுகோயிக் அமிலம்
mukolineமுகோலைன்
Mukolidineமுகோலைடின்
Mukonineமுகோனைன்
Mukonidineமுகோனிடின்
Murrayacinineமுர்ரயசைனைன்
Murrayazolinineமுர்ரயாசோலைனின்
Murrayalineமுர்ரயலைன்
Murrayanineமுர்ரயனைன்
Murrayanolமுர்ரயனோல்
Murrayone imperatoxinமுர்ரேயோன் இம்பெராடாக்சின்
Glycozolineகிளைகோஸோலைன்
methyl carbazoleமெத்தில் கார்பஸோல்
Oleoresinஒலியோரெசின்
Asparagineஅஸ்பாரஜின்
Serine amino acidசெரைன் அமினோ அமிலம்
Aspartic acidஆஸ்பார்டிக் அமிலம்
Oxalic acidஆக்சாலிக் அமிலம்
Alanineஅலனைன்
Prolineபுரோலின்
Cinnamaldehydeசின்னமால்டிகைடு
Girinimbineகிரினிம்பைன்
Girinimbilolகிரினிம்பிலோல்
Koenolineகோயினோலைன்
Bismahanineபிஸ்மஹனைன்
Phebalosinஃபெபாலோசின்
Mahanimbineமஹானிம்பைன்
Pypayafoline carbazoleபைபயாஃபோலின் கார்பசோல்
Xynthyletinசைந்திலெடின்

உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் கருவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்து சாப்பிட வயிற்றிலுள்ள வாய்வை அகற்றி பசியுடன் நல்ல ஜீரணசக்தியையும் கொடுக்கும்.

இலையை கஷாயம் செய்து அருந்த வாந்தி நிற்கும். மேலும் உடலுக்கு வலுவைத்தரும். பித்தத்தை கண்டித்து உடல் சூட்டை தணிக்கும்.

வெயில் காலங்களில் ஏற்படும் கட்டிகளுக்கு கருவேப்பிலையை அரைத்து பூச குணம் கிடைக்கும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும், இருதயநோயை இல்லாமல் செய்வதற்கும் கருவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகமிக அவசியம்.

இது தீர்த்துவைக்கும் நோய்கள் என்று பார்த்தால் ஒன்றல்ல இரண்டல்ல பல உள்ளன என்றாலும் இளைஞர்களை வாட்டி எடுக்கும் தலையாய பிரச்சனையான இளநரையை தடுத்து நிறுத்துவதில் இது முதன்மையானது. இளநரை வராமல் தடுப்பதுடன் முடிக்கு பளபளப்பையும் கொடுக்கிறது. முடி கொட்டுவதிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. இளமை தளும்பும் வழுவழுப்பான தோல்களையும் தருகிறது.

மேலும் இதனுடைய நோய்தீர்க்கும் பண்பு என்று பார்த்தால் சுவையின்மை, மந்தம், மலக்கட்டு, நாட்பட்ட சுரம், பிரமேகம், அம்மைத்தழும்பு, கிரகணி, தலைவலி, வீக்கம், தாகம், அரிப்பு, சூலைநோய் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கிறது.

இதன் இலை, வேர், பட்டை முதலியவற்றை கஷாயமாக செய்து அருந்த பித்தத்தை நீங்குவதுடன் அதனால் ஏற்படுகின்ற வாந்தியையும் நிறுத்துகிறது.

Murraya_koenigii_Stems

தேவையான அளவு கருவேப்பிலையை கொண்டுவந்து அம்மியில் மையாக அரைத்து சுண்டைக்காயளவு சாப்பிட்டுவர வயிற்றுவலி நீங்கும். இரத்தம் சுத்தமாகும். இதையே நெல்லிக்காய் அளவு இருவேளை மூன்றுநாள் தொடர்ந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

கறிவேப்பிலை பொடியை 3 டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு வெந்நீர் அருந்தவும். இதனால் சூதக வாய்வு, நீர்க்கோவை நீங்கும்.

கருவேப்பிலையை துவையலாகவோ அல்லது பொடியாகவோ சாதத்துடன் சேர்த்துவர இதய நோய் வராமல் தடுக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை நன்றாக மென்று தின்று நீர் குடித்துவர உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் குறையும். தொப்பை கரையும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும். வாய்கசப்பு நீங்கும், வாயு தொல்லை அகலுவதோடு உடல் பருமனும் குறையும்.

கருவேப்பிலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பசைபோலாக்கி தலையில் தடவி அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர பேன், பொடுகு தொல்லைகள் நீங்கும். முடியும் செழித்து வளரும்.

இதிலுள்ள கந்தகம் பித்தநீர் சுரப்பு தடையின்றி சுரக்க உதவுகிறது. மேலும் உடலிலுள்ள கழிவுப்பொருட்கள் தடையின்றி வெளியேறவும் கந்தக சத்து உதவுகிறது.

இதிலுள்ள குளோரின் உப்பானது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் ஜீரணநீர்கள் தடையின்றி உற்பத்தியாக உதவுகிறது.

கை, கால் நடுக்கம் உள்ளவர்கள் கருவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்த்துவர நரம்புமண்டலம் பலமடைந்து கை, கால் நடுக்கம் நீங்கும்.

இதில் பாஸ்பரஸ் தேவையான அளவு உள்ளதால் மூளைக்கு பலம் சேர்த்து  ஞாபக சக்தியையும் மேம்படுத்தும்.

இதிலுள்ள மக்னீசியம் சத்தும் போலிக் அமிலமும் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.

இதிலுள்ள “முராயாசினின்” என்னும் வேதிப்பொருள் கிருமி நாசினியாகவும், பூஞ்சை காளான் கொல்லியாகவும் செயல்படுகின்றன.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு காலை, மாலை மூன்றுநாட்கள் தொடர்ந்து சாப்பிட உள்சூடு அகன்று சீதபேதி குணமாகும்.

கண்களுக்கு குளிர்ச்சி தரும் கருவேப்பிலையில் “வைட்டமின் A” தாராளமாக உள்ளதால் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டுவரலாம்.

இதன் இலைகளில் “ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்” (Antioxidants) நிறைந்துள்ளதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

கருவேப்பிலையிலுள்ள “கிரினிம்பைன்” (Girinimbine) என்னும் ஆல்கலாய்டு ஈரல் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

இதன் இலை மற்றும் விதைகளிலிருந்து வாசனை ததும்பும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யானது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் திறனை பெற்றுள்ளது.

கறிவேப்பிலை – 50 கிராம்.

பெருங்காயம் – 50 கிராம்.

சுக்கு – 50 கிராம்.

திப்பிலி – 25 கிராம்.

சீரகம் – 25 கிராம்.

இந்துப்பு – 25 கிராம்.

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை வெயிலில் நன்றாக காயவைத்து பின் ஒருசேர எல்லாவற்றையும் உரலிலிட்டு இடித்து சலித்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதுவே கருவேப்பிலை ஜீரணப்பொடி.

சாதத்துடன் 1 டீஸ்பூன் அளவு  பொடியை கலந்து இதனுடன் சிறிது பசுநெய்யும் சேர்த்து பிசைந்து சாப்பிட உடல் வலிமை பெறும். ஜீரண சக்தி அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். உடல் வெப்பத்தை தணிக்கும். பித்தம் அகலும். நன்கு பசியும் எடுப்பதோடு ஆரோக்கியமும் மேம்படும். ஆயுளும் விருத்தியாகும்.

கறிவேப்பிலையுடன் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். இதனை அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு போதிய அளவு நீர்விட்டு துவையலாக அரைக்கவும்.

Karuveppilai curry thuvaiyal

இது உண்மையாகவே அடிபொழியாக இருக்கும். இதனை உணவுடன் கலந்து சிறிது நெய்யும் விட்டு சாப்பிட வாய்கசப்பு, வாய்நீர் ஊறல், பித்தம்,அரோசகம், அதிசாரம், பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுளைச்சல் முதலியன குணமாகும்.

சிலருக்கு சாப்பிட்ட உடனேயே மலங்கழிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வரும். அப்படியானவர்கள் மேற்கண்ட துவையலை சாதத்தில் கலந்து உண்டுவர மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

இந்த துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துவர செம்பட்டை முடி கருமையடையும். வறண்ட தோல்கள் வறட்சி நீங்கி பளபளப்படையும். பசியின்மை போயேபோகும். வாய்கசப்பு, பித்தம் நீங்கும்.

ஈர்க்கு (கறிவேப்பிலை இலையின் நடுத்தண்டு) – 25 கிராம்.

சுக்கு – 25 கிராம்.

சீரகம் – 25 கிராம்.

ஓமம் – 25 கிராம்.

மேற்கண்ட நான்கு பொருட்களையும் 2 படி தண்ணீரில் போட்டு கால் படியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து இருவேளை அருந்த அஜீரண வாயு அகலும்.

கறிவேப்பிலை சாறு – 6 அவுண்ஸ்.

கற்பூரவள்ளி இலை சாறு – 6 அவுண்ஸ்.

தேங்காய் எண்ணெய் – 12 அவுண்ஸ்.

கருஞ்சீரகம் – 25 கிராம்.

மேற்குறிப்பிட்ட நான்கு சரக்குகளையும் ஒன்று கலந்து சிறு விறகால் கருஞ்சீரகம் கருகாதவண்ணம் தைலபதமாக காய்ச்சி வடித்து ஆறியபின் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இதனை தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர தலைகுத்து, ஒருதலைக்குத்து முதலியன குணமாகும்.

கருவேப்பிலையை காயவைத்து இடித்தெடுத்துக்கொள்ளவும். இந்த பொடி 1 தேக்கரண்டி அளவும் இதனுடன் சோம்பு பொடி அரை தேக்கரண்டி அளவும்  சேர்த்து ஒரிஜினல் பன்னீர்விட்டு குழைத்து பருக்களின்மேல் பூசிவர பருக்கள் காய்ந்து உதிர்ந்துவிடுவதோடு பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மாறிவிடும்.

சிலருக்கு அம்மை நோயினால் முகத்தில் புள்ளி புள்ளியாக வடுக்கள் தோன்றி இருக்கும். முகத்தின் அழகை கெடுக்கும் இவ்வடுக்களை நீக்கி முகத்தை பொலிவுற செய்ய கருவேப்பிலை கைகொடுக்கிறது.

கறிவேப்பிலை – 1 கைப்பிடி.

கசகசா – 15 கிராம்.

கஸ்தூரி மஞ்சள் – 8 கிராம்.

இம்மூன்றையும் சுத்தமான கல்வத்திலிட்டு மைபோல் அரைத்தெடுத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் நன்கு தடிமனாக பூசி 20 நிமிடம் ஊறவிட்டு அதன்பின் வெந்நீரால் கழுவி விடவும். இவ்வாறு காலையும் மாலையும் தொடர்ந்து செய்துவர தழும்புகள் படிப்படியாக மறைந்துபோகும்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இதுவரையில் கருவேப்பிலையைப்பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் காய்களின் தன்மை, விதை மற்றும் வேர்களின் தன்மைகளோடு அதன் மருத்துவத் தன்மைகளையும் பார்த்தோம். அடுத்து இதன் தொடர்ச்சியாக வரும் மூன்றாவது பதிவில் [PART 3] கருவேப்பிலையை பயிரிடும் முறையை பார்க்க இருக்கின்றோம்… தொடருங்கள்….

[தொடர் தொடரும்]…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!